திங்கள், 24 ஜூலை, 2017

என் உயிர்த் தோழன்

அறிமுகங்கள் இல்லாத புதுமுகங்கள் நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ஒரு படம் என் உயிர்த் தோழன். அரசியல்வாதிகளின் அரசியலையும், சாதாரண மக்களின் வாழ்க்கையையும் பற்றிப் பேசிய படம்.

தொழிலாளர் கட்சிக்காக உழைக்கும் தொண்டன் ரிக்ஷாகாரன் தருமன் தனது அக்காவுடன் குயிலுக்குப்பத்தில் வசிக்கிறான். அவனது பேச்சுக்கு குயிலுக்குப்பமே அடிபணிகிறது.

மற்றொருபுறம் கிராமத்துப் பெண் சிட்டு தனது கிராமத்திற்கு வந்த நாடக நடிகர் பொன்வண்ணன் மீது காதல் கொண்டு அவனோடு ஊரைவிட்டு ஓடி வருகிறாள். அவளுடைய நகைகளை வஞ்சகமாக பறித்த பொன்வண்ணன் அவளை ரயிலிலேயே விட்டுவிட்டு இரவில் தப்பி ஓடிவிடுகிறான்.

குயிலுக்குப்பத்திற்கு வரும் சிட்டு தருமனிடம் அடைக்கலம் ஆகிறாள். சிட்டுவை தன்வசப்படுத்திக் கொள்ள முயல்கிறான் ஆளுங்கட்சி பிரமுகர் டில்லி. அவனிடமிருந்து சிட்டுவை மீட்டு ஒரு கிறித்தவக் காப்பகத்தில் சேர்க்கிறான் தருமன். சிட்டு தருமன் மீது காதல் கொள்கிறாள்.
தருமனுக்காக டில்லி வைத்த சூழ்ச்சியில் தருமனின் அக்கா இறந்துவிடவே, தனிமரமான தருமனுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறாள் சிட்டு. அவளைத் திருமணமும் செய்து கொள்கிறாள்.

இதற்கிடையில் திருடனான பொன்வண்ணன், டில்லியுடன் சேர்ந்து கொள்கிறான். டில்லி தொழிலாளர் கட்சியில் சேர்கிறான். அடுத்து வரும் தேர்தலில் டில்லி பொன்வண்ணனை குயிலுக்குப்பம் தொகுதி வேட்பாளராக்குகிறான். இரண்டாவது அத்தியாயத்தில் பொன்வண்ணனை சந்திக்கும் சிட்டு தனது கணவன் தருமனிடம் உண்மையைக் கூற கட்சிப் பணிகளை விட்டு அறவே ஒதுங்குகிறான் தருமன்.

அவனை தனது பேச்சுத் திறமையால் தன் வழிக்கு கொண்டு வருகிறார் தொழிலாளர் கட்சித் தலைவர். மீண்டும் கட்சிக்காக மாடுபோல உழைக்கிறான் தருமன்.

தொழிலாளர் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க, அனுதாப ஓட்டுக்களைப் பெற தலைவர், டில்லி, பொன்வண்ணன் மூவரும் சேர்ந்து சதி செய்து தொண்டனான தருமனைக் கொலை செய்கிறார்கள். அந்தப் பழியை ஆளுங்கட்சியின் மீது போடுகிறார்கள்.

அவர்கள் திட்டமிட்டபடி தொழிலாளர் கட்சி வெற்றி பெறுகிறது. பதவியேற்க போகுமுன்பு தருமனின் கல்லறையில் மாலை வைத்து, மரியாதை செலுத்துவதற்காக வருகிறார்கள் தலைவர்கள். உண்மையை அறிந்த குயிலுக்குப்பம் ஒன்று கூடி மூவரையும் கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறது. படம் முடிவடைகிறது.

"தீபங்களே தெரிந்து கொள்ளுங்கள்
திரிகள் மட்டுமே கருகிக் கொண்டிருக்கின்றன
தூண்டுகோல்கள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன"

என்று சொன்ன கவிக்கோ அப்துல் ரகுமானைப் போல் அரசியலையும் அது சார்ந்த வன்முறையையும் கடுமையாகச் சாடுகிறது இந்தப் படம்.

தலைவன் என்று எவனையாவது கருதி, அவனுக்கு கொடி பிடித்து, போஸ்டர் ஒட்டி, உங்கள் சந்தோஷத்தையும் உங்கள் குடும்பத்தின் நிம்மதியையும் தொலைத்து விடாதீர்கள் என்று கூறுகிறது இந்த பாரதிராஜா படம்.

பொதுவுடைமைச் சித்தாந்தம் படிக்கும்போது கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்தத்தான் முடியவில்லை. எல்லோருக்கும் சமமாகப் பங்கிட்டுத் தரவேண்டும் என்றால் ஐந்து மணிக்கு எழுந்திருப்பவனுக்கும், ஒன்பது மணிவரை தூங்குபவனுக்கும் ஒரே சம்பளம் கொடுப்பதைப் போலிருக்குமே.

சுதந்திரம் பெற்ற நாள்முதல் இன்றுவரை நமது அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் தானாக வெற்றி பெற்றதை விட எதிர்க்கட்சியின் மீதான மக்களின் அதிருப்தியினால் பெற்ற வெற்றிகளே அதிகம்.

அவர்களை ஆதரிப்பது, இல்லை இவர்களை ஆதரிப்பது என்ற இரண்டுமே அவர்களுக்கு லாபம்தான். அவர்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது ஒருவேளை இதற்கு தீர்வாகலாம்.

முடிந்தால் ஓட்டுப்போடுவதை விட்டுவிடுங்கள். அது ஜனநாயகக் கடமை. அதைக் கண்டிப்பாக ஆற்ற வேண்டும் என்று கூறி மக்களை ஏமாற்றி வைத்திருக்கின்றனர் அரசியல்வாதிகள்.

தொன்னூறு சதவீதம் மக்கள் ஓட்டுப்போடாமல் இருந்து ஆறு சதவீதம் மக்கள் ஒரு கட்சிக்கும், மீதம் பேர் இன்னொரு கட்சிக்கும் ஓட்டுப்போட்டால், ஆறு சதவீதம் பேர் வாக்களித்த கட்சி ஆட்சி அமைக்கும். எனில் எல்லோரும் தவறான வேட்பாளர்கள் என்று முடிவு செய்த தொன்னூறு சதவீதம் பேருக்கு மதிப்பென்ன? ஓட்டுப்போட வேண்டியதன் அவசியமென்ன?

எல்லா அரசியல் தத்துவங்களும் ஒருவித மாயை. அரசியல்வாதிகள் கேட்பவர் உணர்ச்சி வசப்படும்படியாக அடுக்குமொழியில் பேசுவார்கள். ஆனால் அவர்கள் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். அந்த அடுக்குமொழிப் பேச்சிலே மயங்கி சீரழிந்தவர்கள் ஏராளம்.

வீடுகூட இல்லாமல் இருந்தும், ஒரு கழிப்பிடம் கூட இல்லாமல் இருந்தும், சிறையில் மது அருந்திக் கொண்டிருக்கும் தலைவனுக்காக தீக்குளிக்க போனானே இந்தப் படத்தின் தருமன் அவன் அதற்கு ஒரு உதாரணம்.

முதலாளித்துவத்தை முன்வைக்கும் கட்சிகளும் சரி, தொழிலாளர் நலனை முன்வைக்கும் கட்சிகளும் சரி மக்களை சுரண்டுவதே அவர்களின் நோக்கம். மற்றவை எல்லாம் வேஷம்.

இன்றிருக்கும் இளைஞர்கள் எல்லாம் இஞ்சினியரிங் படித்தால் மட்டும் போதாது. அரசியல் அறிவியல், பொருளாதாரம், சட்டம், மனோதத்துவம், பொது நிர்வாகம் அனைத்தும் கற்க வேண்டும்.
ஏன் தெரியுமா?

அப்போது மட்டுமே நமது அரசியல் தலைவர்களின் அதிகாரம் என்ன? கடமைகள் என்ன? அவர்களுடைய பேச்சின் அர்த்தமென்ன? அது சாத்தியமானதா? என்பதன் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

மனிதன் ஏழ்மையில் இருக்க முதன்மைக் காரணம் முயற்சியின்மையும் அறியாமையும். இன்று முதலாளித்துவ நாடுகள் போல கம்யூனிசம் நடைமுறையில் இருக்கும் நாடுகளிலும் ஏழ்மை இருக்கிறது.

ஆம். இருக்கவே செய்யும்.

இப்படத்தின் தருமனைப் போன்று மனிதன் முட்டாளாக இருந்தால் ஏழ்மை இருக்கவே செய்யும்.

தன் வயிறு நிறையும் வரை மனிதன் எவனும் சுயநல வாதியாகவே இருக்க வேண்டும். பொதுநலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய தலைவனே பொதுநலவாதியாக இல்லாதபோது அடுத்தவேளை உணவுக்கு வழியற்றவனான நீ ஏன் பொதுநலத்தைப் பற்றி சிந்திக்கிறாய்?. ஏன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறாய்?

ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. இதே மாதிரிக் கருத்தை, அரசியல் ஆழத்தை, அக்கிரமத்தை தெளிவாகக் கூறிய மற்றொரு படைப்பு கண்ணதாசனின் “ரத்த புஷ்பங்கள்”. முடிந்தால் அதையும் படித்துப் பாருங்கள்.

வெள்ளி, 21 ஜூலை, 2017

விக்ரம் வேதா

மாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள ஒரு திரைப்படம் விக்ரம் வேதா. விக்ரமாதித்தன் வேதாளத்தை பிடித்து வர கிளம்பி போய் அது தினமும் ஒரு கதை சொல்லி இறுதியில் கேள்வியும் கேட்குமே, அதே போல கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

வட சென்னையின் மிகப்பெரிய தாதா வேதாவை பிடித்துக் கொல்ல கிளம்புகிறார் என்கவுண்டர் போலீஸ் அதிகாரி விக்ரம். தானாக வந்து சரணடையும் வேதா ஒரு கதை சொல்லி கேள்வி கேட்கிறார். பிறகு தப்பி செல்கிறார். பிறகு மீண்டும் மீண்டும் சந்திப்பு, கதை, கேள்விகள். அனைத்துமே வேதாவின் வாழ்வில் நடக்கும் விசயங்கள்.

ஒவ்வொரு கேள்வியிலும் ஏதோ விடை கிடைத்த மாதிரி இருந்தாலும் மேலும் மேலும் கதையில் முடிச்சுகள் விழுந்து கொண்டே இருக்கிறது. கடைசியில் மொத்தமாக விழுந்த முடிச்சுகளை அவிழ்க்கிறார் விக்ரம்.

திரைக்கதையின் ஒரு முனை விக்ரம், மறுமுனை வேதா. இவர்களிருவரையும் இணைக்கும் புள்ளியாக இருப்பவர் விக்ரமின் மனைவி. திரைக்கதையின் மற்றொரு பலம் எந்தக் கதாபாத்திரமும் தேவையற்று இருக்கவில்லை. அனைவருடைய பங்கும் கதையில் இருக்கிறது.

ரவுடிகளாக இருப்பவர்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல. சூழ்நிலையால் அப்படி ஆனவர்களாக இருக்கலாம். அதே போல் போலீஸாக இருப்பவர்கள் எல்லாம் யோக்கியமானவர்கள் அல்ல. அயோக்கியமானவர்களாகவும் இருக்கலாம் என்பதையும் கூறி இருக்கிறார் இயக்குனர்.

இந்தக் கதை எந்தக் கருத்தையும் சொல்ல வரவில்லை. ஒரு தாதாவின் வாழ்வில் ஒரு பகுதி அவ்வளவுதான். ஆனால் திரைக்கதை அமைத்த விதம் தான் மிகவும் அருமை. விக்ரமாதித்தன் கதைக்கு ஈடாக ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.

விக்ரமாக மாதவன் மிரட்டியிருக்கிறார் என்றாலும், வேதாவாக வரும் விஜய் சேதுபதி தனது ஸ்டைல் மாறாமல் அதே நேரம் தாதாவாகவும் பின்னியிருக்கிறார். விக்ரம் வேதா ஒரு ஜாலியான பொழுதுபோக்கு சினிமா. பார்க்கலாம்.

சனி, 8 ஜூலை, 2017

நிழல்கள்

சந்திரசேகர், ரவி நடித்து பாரதிராஜா இயக்கத்தில் பல ஆண்டுகள் முன்பு வெளிவந்த படம் நிழல்கள். மனிதன் முதலில் வயிற்றுப் பிழைப்புக்கு வழி வகை செய்ய வேண்டும். பிறகு வாழ வழிவகை செய்ய வேண்டும். அதற்குப் பிறகுதான் ஆசைகள், லட்சியங்களை நிறைவேற்ற முடியும் என்பதை தெளிவாகக் காட்டிய படம்.
தன் படிப்புக்கேற்ற வேலை தேடி அலையும் எம்.ஏ பட்டதாரியான கோபி, சினிமாவில் மியூசிக் டைரக்டராக முயற்சி செய்து வரும் ஹரி இருவரும் சென்னையில் ஒரு வீட்டின் மாடியில் குடியிருக்கின்றனர்.

கீழே உள்ள வீட்டு உரிமையாளருக்கு இரண்டு மகன் ஒரு மகள். மூத்தவன் படித்து விட்டு வேலை தேடுகிறான். இளையவன் பிரபு கல்லூரிக்கு கூட சரியாகப் போகாமல் இயற்கையை ரசித்துக் கொண்டு கனவுலகிலேயே வாழ்ந்து வருகிறார்.

இவர்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருப்பவள் மகா. அவளுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வருகிறார் கோபி. முதலில் கோபியைத் தவறாக நினைக்கும் மகா பிறகு புரிந்துகொள்கிறார். இருவரும் காதலிக்கின்றனர்.

ஆத்திரக்காரனான கோபி இண்டர்வியூ என்ற பெயரில் ஏமாற்றியதற்காக அடிதடியில் இறங்குகிறார். தன்னுடைய ஆர்மோனியத்தை தவறாகப் பேசியதற்காக ஹரி வட்டிக்கடை செட்டியாரிடம் அடிதடியில் இறங்குகிறார். இப்படி இருவரும் போலீஸ் ஸ்டேசனில் அடைக்கப்படுகின்றனர்.

கனவுலகிலேயே வாழ்பவரான பிரபுவின் ஓவியம் முதலில் நிராகரிக்கப்படுகிறது. சிந்தனை நிராகரிக்கப்படுகிறது. அவரும் பெற்றோரால் நிராகரிக்கப்படுகிறார். ஒரு வித்வானிடம் வீணை கற்றுக் கொள்ள தயாராகும் போது அந்த வீணை வித்வானின் விதியை முடித்து வைத்து கடவுள் கூட பிரபுவை நிராகரிக்கிறான்.

வீணைக் கற்றுக் கொள்ள முடியாத சோகத்தில் கஞ்சா அடித்து போலீஸில் மாட்டிக் கொள்கிறார் பிரபு. இம்மூவரையும் தனது தங்கச் சங்கிலியை அடகு வைத்து மீட்கிறார் மகா.
மூவருக்குமே அவருடைய லட்சியங்கள்தான் கண்ணுக்கு தெரிகிறது. உலகத்தை அவர்கள் கவனிக்கவே இல்லை. ஒரு வகையில் அவர்கள் லட்சியவாதிகள். வேறொரு வகையில் அவர்கள் தறுதலைகள் ஏனெனில் அவர்களால் அவர்களுடைய தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை.

தன்னுடைய தனிப்பட்ட உலகில் வாழும் இவர்கள் யதார்த்த உலகினை கவனிப்பதே இல்லை. அவர்களை யதார்த்த உலகிற்குள் அழைத்து வர டீக்கடை சிறுவன் எத்தனையோ முறை அழைப்பு விடுக்கிறான். ஆனால் இவர்கள் கேட்கவில்லை.

இறுதியில் கையில் பணமுமில்லாமல், பிழைப்புக்கும் வழியில்லாமல் கோபி, ஹரி இருவரும் வீட்டை விட்டுத் துரத்தப் படுகின்றனர். இதற்கிடையில் கோபியின் அப்பா இறந்து விட்டதாக தந்தி வருகிறது. நான் பணம் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி ஆர்மோனியத்துடன் கடற்கரைக்கு சென்று தன் இசை மூலம் பணம் சம்பாதிக்க முயல்கிறான் ஹரி.

சாவுக்குப் போக பணமில்லாமல் இருக்கும் வேளையில் ரிக்ஷாகாரர் மணியின் மகன் (டீக்கடை பையன்) ஒரு பாத்திரத்தை அடகு வைத்து பணம் கொண்டு வர செல்கிறான். வரும் வழியில் பாதாள சாக்கடையில் விழுந்து உயிருக்குப் போராடுகிறான். அவனைக் காப்பாற்ற வட்டிக்கடைகாரரிடம் பணம் கேட்டு அது கிடைக்காமல் போகவே அவரைக் கொலை செய்கிறான் கோபி.

எல்லா விதத்திலும் நிராகரிக்கப்படும் பிரபுவிடம் மகா காட்டும் கருணையை காதல் என்று எண்ணுகிறான் பிரபு. இறுதியில் நடக்கும் மோதலில் பிரபு இறந்து விடுகிறான். காதலர்கள் இருவரும் கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்படுகின்றனர். ஆர்மோனியப் பெட்டியோடு கடற்கரைக்குச் சென்ற ஹரி பைத்தியமாகிறான். டீக்கடை சிறுவன் இறந்து போகிறான்.

சமூக யதார்த்தத்தை மறந்து விட்டு லட்சியம் என்ற பெயரில் கனவு காண்பவர்களை நிழல்கள் என்று காட்டியிருக்கிறார் இயக்குனர். லட்சியப் பாதையில் செல்ல வேண்டிய இளைஞர்களுக்கான படம். கனவு காணுங்கள் என்று சொன்னார் கலாம். ஆனால் கனவு மட்டும் கண்டு யதார்த்தத்தை மறந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார் பாரதிராஜா.
இதே மாதிரி கருத்துள்ள ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயக்கண்ணாடி என்ற பெயரில் இயக்குனர் சேரனால் எடுக்கப்பட்டது. படம் என்னவோ ஓடவில்லை. யதார்த்தத்தை பற்றிப் பேசுவது இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை போலும்.

இந்தப் படத்திற்கு கதை, வசனம் எழுதி ஒரு பாடலும் எழுதியவர் நடிகர் மணிவண்ணன். அவரே ரிக்ஷாகாரனாகவும் நடித்திருப்பார். திரைக்கதை எழுதி இயக்கியவர் பாரதிராஜா.

படத்தில் படித்த இளைஞர்களை நிழல்களாக காட்டிய இயக்குனர் நிஜமாக ஒரு சிறுவனையும் காட்டியிருக்கிறார். “இப்பவும் பிழைக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு” என்று ஒவ்வொரு முறையும் தன்னம்பிக்கை தருகிறான் அவன்.

ஆரம்பக் காட்சியில் கோபி கதவைத் திறந்து வீட்டுக்குள் வருகிறார். கதவில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களை ஒரு நிமிடம் காட்டி அந்த வீட்டில் இருப்பவர்களை நமக்கு நறுக்கென்று அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குனர். என்னைப்போல இப்படி பக்கம் பக்கமாக இழுப்பதில்லை.

தன் வீட்டை நோக்கி கைதட்டுவதாக கோபியை முதலில் தவறாக நினைக்கும் மகா பின் காய்கறி வாங்கும் போது உண்மையை உணர்ந்து கொள்கிறாள். அந்தக் காட்சியில் மகாவின் மனநிலையை தராசு சமநிலைக்கு வருவதைக் கொண்டு நமக்கு உணர்த்துகிறார் இயக்குனர். அந்தக் காட்சியும் சிறந்த காட்சிப்படுத்துதல்.

மற்றொரு காட்சியில் பிரபுவின் தங்கை, “அவரது ஆட்சிக்காலத்தில், வசந்த விழாக்காலத்தில் முத்துக்களும், பவளங்களும் தெருக்களிலே குவித்து வைக்கப்பட்டிருந்தன” என்று புத்தகத்தை சத்தமாகப் படித்துக் கொண்டிருக்க மற்றொரு புறம் அவனது தாய், ரேஷனில் கிடைக்கும் கோதுமையை வாங்கவில்லையென்று பிரபுவின் அண்ணனைத் திட்டிக் கொண்டிருக்கிறாள். இங்கே கற்றுத் தரப்படும் கல்விக்கும் யதார்த்தத்திற்கும் எத்தனை வித்தியாசம் என்று இந்தக் காட்சியில் காட்டப்படுகிறது.

மனதில் பெரும் வைராக்கியத்தோடு லட்சியப்பாதையில் செல்பவன் ஒன்று பெருவெற்றியைப் பெறுவான், சூழ்நிலைகள் சரியாக இல்லையெனில் தோல்வி தரும் வருத்தத்தில் அல்லது விரக்தியில் மனஅழுத்தத்திற்குள்ளாவான். அப்படி மன அழுத்தத்திற்குள்ளாகி பைத்தியமாகிப்போனவன் தான் இந்த ஹரி. “வயிற்றுப் பிழைப்புக்காக லட்சியத்தை விட்டுட்டா நமக்கும் தேவிடியாளுக்கும் என்னடா வித்தியாசம்?” என்று கேட்குமளவு வைராக்கியம் கொண்டவன் இந்த ஹரி.

படத்தில் படித்த இளைஞர்களை நிழல்களாக காட்டிய இயக்குனர் நிஜமாக ஒரு சிறுவனையும் காட்டியிருக்கிறார். “இப்பவும் பிழைக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு” என்று ஒவ்வொரு முறையும் தன்னம்பிக்கை தருகிறான் அவன். இளைஞர்கள் பின்பற்ற வேண்டியவனும் அவனே.

வியாழன், 29 ஜூன், 2017

வனமகன்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் வனமகன். காட்டைப் பற்றியும் காட்டுவாசி ஒருவனைப் பற்றியும் வெளியாகியுள்ள படம். ஜெயம் ரவி பொதுவாகவே வித்தியாசமான கதையுள்ள படங்களில் நடிப்பார். மேலும் அவருடைய படங்களில் ஹீரோயிசம் சார்ந்த பைத்தியக்காரத்தனங்கள் அதிகம் இருக்காது.
இந்தப் படத்தின் கதை என்னவென்றால் தொழிலதிபரான காவ்யா தனது நண்பர்களுடன் அந்தமான் காடுகளுக்கு சுற்றுலா செல்கிறார். அப்போது ஒரு காட்டுவாசி அவர்களுடைய காரில் அடிபட்டு விடுகிறார். அவரை சென்னைக்கு தூக்கி வந்து மருத்துவ உதவி செய்து காப்பாற்றுகிறார். ஆஸ்பத்திரி அவரை சந்தேகிப்பதால் வீட்டில் கூட்டி வந்து வைத்துக் கொள்கிறார். அடிபட்டதில் பழசெல்லாம் மறந்து விடுகிறது. அவரை வீட்டில் வைத்து சமாளிப்பது மிகக் கடினமாக இருக்கிறது.

அம்மா, அப்பா இல்லாத காவ்யாவுக்கு அப்பாவுடைய நண்பரான பிரகாஷ்ராஜ் பாதுகாவலாராக இருக்கிறார். அவருடைய மகன் காவ்யாவைக் காதலிக்கிறான். ஒரு சமயம் அவன் காவ்யாவிடம் அத்துமீறி நடந்துகொள்ள காவ்யா கூடவே இருக்கும் காட்டுவாசி அவனை சாகும் நிலைக்கு அடித்துப் போடுகிறான். இந்த நேரத்தில் அந்தக் காட்டுவாசியை போலீஸ் வந்து கைது செய்து கூட்டிப் போய்விடுகிறது.

போலீசில் போய் விசாரித்தால், காட்டுவாசி அந்தமான் கொண்டு போகப்பட்டதாகக் கூறுகிறார்கள். அந்தமான் போலீசிடம் இருந்து காவ்யாவும் காட்டுவாசியும் தப்பித்து ஓடுகின்றனர். காட்டுக்குள் ஒரு பகுதிக்கு செல்லும்போது காட்டுவாசிக்கு பழசெல்லாம் நினைவுக்கு வருகிறது.

ஜாரா என்ற அந்தக் காட்டுவாசி அங்கே உள்ள காட்டுவாசியில் முக்கியமானவன். அந்தக் காட்டை அழிக்க நினைக்கிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அதற்காக அவர்களை அப்புறப்படுத்த நினைக்கிறது. நடக்கும் மோதலில் நிறைய காட்டுவாசிகள் கொல்லப்படுகிறார்கள். அங்கிருந்து தப்பித்து ஓடும்போதுதான் சுற்றுலா சென்ற காவ்யாவின் காரில் அடிபட்டு இருக்கிறான் ஜாரா.

காட்டுக்குள் சென்ற ஜாரா, காவ்யாவைத் தேடி காவ்யாவின் பாதுகாவலர் பிரகாஷ்ராஜ் போலீசுடன் வருகிறார். அவர் காவ்யாவைக் காப்பாற்றுவதற்காக அனைத்துக் காட்டுவாசிகளையும் கொன்றுவிட நினைக்கிறார். போலீஸில் இருந்து ஜாரா, காவ்யா கடைசியில் தப்புகிறார்கள். காவ்யா ஜாராவுடனே இருக்க முடிவுசெய்கிறாள்.

இந்தப் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற மொக்கப்படத்துடன் வெளிவந்தது. ஆனால் சில இணைய தளங்களில் இரண்டுக்கும் ஒரே மதிப்பெண்தான் தந்திருந்தார்கள். ஆனால் இரண்டும் வேறு வேறு. வனமகன் ஒரு சிறந்த படம்.

முதல் பகுதியில் ஜாரா காவ்யாவின் வீட்டில் தங்கியிருக்கிறான். பழசெல்லாம் மறந்துவிட்டது. ஏதோ ஒரு விலங்கைப் போல நடந்து கொள்கிறான். எதுவும் பேசுவதில்லை. தொலைக்காட்சியில் தெரியும் புலியைப் பார்த்து அங்கே அம்பு விடுகிறான். மரத்தில் தான் தூங்குகிறான். செல்போன் வீடியோவில் தெரியும் பெண்ணை செல்போனுக்கு பின்னாடி தேடுகிறான். ஏசியில் குளிர் அடித்தவுடன் கையில் இருக்கும் பணத்தை நெருப்பில் போட்டு குளிர்காய்கிறான்.

இரண்டாவது பாதியில் காட்டுக்கு போய் அனைத்தும் ஞாபகம் வந்தாலும் அவன் காட்டுவாசியாதலால் இவர்களது மொழி புரியவில்லை. காட்டுக்குள் அவனது கூட்டத்தை தேடி அலைகிறார்கள். காட்டுக்குள் போனதும் காவ்யாவுக்கும், தம்பிராமையாவுக்கும் எதுவும் புரியவில்லை.

காட்டுவாசிகள் மிருகத்தனமானவர்கள் அல்ல. மனிதர்களே பொறாமை, சூது போன்ற அனைத்து கள்ளத்தனங்களையும் கொண்டிருப்பவர்கள் என்பதை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள். வெள்ளந்தியான காட்டுவாசி மனிதர்களுக்கு நாம் நாகரீகத்தின் வாயிலாகக் கற்றுக் கொண்ட அனைத்து முட்டாள்தனங்களும் தெரியாது.

வீட்டில் இருக்கும்போது ஜாரா பசியில் உணவை வேகவேகமாக உண்கிறான். அதைப் பார்த்து தம்பிராமையா அவனைக் கிண்டல் செய்வதும். அதேபோல் காட்டுக்கு போனதும் ஜாராவை விட வேகமாக இவர்கள் உணவு உண்பதும் அழகான காட்சிகள்.

பசி ஒன்றுதான். ஜாராவுக்கும், காவ்யாவுக்கும் அதில் பேதமில்லை. அதிலே நாகரீகத்தை மனிதன் புகுத்திவிட்டான். இப்போது நிறைய பேர் பசிக்காக உண்பதில்லை. அடுத்தவனிடம் சொல்லிக்கொள்ள வேண்டும். நாங்கள் இந்தவாரம் கே.எஃப்.சி போனோம். அஞ்சப்பர் போனோம் என்று சொல்லிக்கொள்வதற்காக சாப்பிடுகிறார்கள்.

நாகரீக மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மனிதன் மற்றவர்களை அவர்கள் விருப்பப்படி வாழவிடுகிறோமா? இல்லை. சக்தியிருந்தால் மற்றவர்களுக்காக பரிந்து பேச யாரும் இல்லையென்றால் அவர்களை என்ன செய்கிறான். வாழவிடாமல் செய்கிறான்.

விசாரணை என்றொரு படம் வந்ததே அந்தப் படத்தின் ஆணிவேர் அந்த நான்கு இளைஞர்களுக்கு உதவி செய்ய ஒரு சரியான பின்புலம் இல்லை, அவர்களிடம் சக்தியும் இல்லை என்பதே.

படத்தை விடுங்கள். அமெரிக்கா என்றொரு நாடு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இல்லை. அங்கே வாழ்ந்தவர்கள் செவ்விந்திய பழங்குடிகள். இன்று அமெரிக்காவில் இருப்பவர்கள் எவரும் பூர்வீகமாக அமெரிக்காவைக் கொண்டவரில்லை. அமெரிக்காவில் முதலில் குடியேறிவர்கள் பிரான்ஸ் நாட்டினர். பிறகு நிறைய ஐரோப்பியர் குடியேறினர்.

அங்கு சென்றவர்கள் தனக்கு இடம் வேண்டும் என்பதற்காக தன்னிடம் சக்தியும், ஆயுதங்களும் இருக்கிறது என்பதற்காக அங்கிருந்த பழங்குடியினர்களை அழித்தனர். வெளியேற்றினர். இன்று அமெரிக்கா நாகரீகத்தை பிறர் போட்டி போட்டுக் கொண்டு பின்பற்றத் துடிக்கிறார்கள்.

இதே கதைதான் முதன் முதலில் நியூசிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் ஆங்கிலேயர்கள் குடியேற்றங்களை உருவாக்கும் போது நடந்தது. ஆஸ்திரேலிய பழங்குடியினரை ஆங்கிலேயர்கள் முற்றிலுமாக அழித்துவிட்டார்கள். அந்தப் பழங்குடியினர் மரத்தின் வழியாகவே தொலைதூரத்திற்கு பேசும் டெலிபதி முறையை எல்லாம் கூட கையில் வைத்திருந்தவர்கள்.

இங்கே கூட அதுதானே நடக்கிறது. நீங்கள் வேறொரு ஊரில் குடியேறினால் அங்கே உங்களை வந்தேறிகள் என்பார்கள். ஒருவேளை பூர்வீகக் குடிகளை விட குடியேறியவர்கள் அதிகம் இருந்தால் அவர்களை அடித்து விரட்டி விடுவீர்கள். இன்றைய இஸ்ரேலில் குடியேறிய யூதர்கள் அங்குள்ள பூர்வீகக் குடிகளான அராபியர்களை அடித்து விரட்டித்தானே பாலஸ்தீனத்தில் இருந்து பாதியை இஸ்ரேல் என்று உருவாக்கினார்கள்.

இந்தப் படத்தில் புலிக்கு ஜாரா வைத்தியம் செய்கிறான். அதை அறிந்து கொள்ளும் அந்தப் புலிகூட ஜாராவுக்கு உதவி செய்கிறது. தனது உயிரைப் பணயம் வைக்கிறது. ஆனால் மனிதன் அப்படி செய்யமாட்டான். ஏனெனில் இவன் நாகரீகத்தில் வளர்ந்து விட்டான். கற்றுக் கொண்டதால் நாசமாகிவிட்டான். இயற்கையிலிருந்து விலகி விட்டான்.

வனமகன் ஒரு சிறந்த மகன். யாரேனும் ஒரு வனமகனைக் கண்டால் அவனை திருத்த முயற்சிக்காதீர்கள். அவனிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். படத்தின் விமர்சனத்தை ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன். இப்போது உங்கள் பகுதியில் அந்தப் படம் தியேட்டரில் பார்க்க கிடைத்தால் அந்த தியேட்டர் உரிமையாளர் சிறந்த மகன். ஒருவேளை கிடைக்காவிட்டாலும் நீங்கள் தொலைக்காட்சியில் கண்டிப்பாகப் பார்க்கத் துடித்தால் நீங்களும் சிறந்த மகன்.

சனி, 24 ஜூன், 2017

அன்பானவன், அசராதவன், அடங்காதவன்


சிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடித்து வெளிவந்துள்ள ஒரு படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன். படத்தின் முதல் பாகம் இப்போது வந்துள்ளது. இரண்டாவது பாகம் இனிமே வரும். அப்படித்தான் சொன்னார்கள்.

மதுரையில் உள்ள ஒரு பெரிய ரவுடியின் கையாளாக இருப்பவர்  மதுர மைக்கேல் (சிம்பு). அடிதடி, காதல் இந்த இரண்டு வேலைகளை மட்டும் செய்கிறார். காதலி அடிதடிகளை விட்டு விட சொல்கிறார். இவர் கடைசியாக ஒரு கொலை செய்து விட்டுவிடுகிறேன் என்கிறார். அந்தக் கொலை செய்யும் போது போலீஸில் மாட்டிக்கொள்கிறார்.

பிறகு நண்பர்கள், அவரது காதலிக்கு அவசரமாக கல்யானம் நிச்சயம் செய்த நாளில் அவரை ஜெயிலை உடைத்து ரிலீஸ் செய்கின்றனர். ஆனால் கல்யாணத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடுகிறார். படத்தில் மற்றொரு புறம் மைக்கேல் என்ற சர்வதேச குற்றவாளியை போலீஸ் தேடுகிறது.

இடைவேளைக்கு பிறகு அஸ்வின் தாத்தா என்ற வேடத்தில் வரும் சிம்பு தமன்னாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். வேறெந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் இறுதியில் தமன்னா திக்கு சிவா என்பவனை தனது காதலன் என்று அறிமுகம் செய்கிறார். எனவே அஸ்வின் தாத்தா திக்கு சிவாவை கடத்தி வந்து விடுகிறார். அதோடு படம் முடிகிறது. அஸ்வின் தாத்தாவுக்கும், திக்கு சிவாவுக்குமான காட்சிகள் இரண்டாவது பாகத்தில் வெளிவரும்.

முதல் பாகத்தை மட்டும் பார்த்தால் படத்தை செம மொக்கை என்று சொல்லலாம். இடைவேளைக்கு முன்பு கொஞ்சம் காதல், சண்டை, இடைவேளைக்கு பின்பு தாத்தாவாக இருந்து கொண்டு தமன்னாவை காதலிக்கிற காட்சிகளை தவிர வேறெதுவும் இல்லை.

எல்லோரும் பார்க்கும் படியான படம் இல்லை. அவரது ரசிகர்கள் வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம். இந்த ஹீரோக்கள் என்று சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் ரசிகர்களை பைத்தியக்காரர்கள் என்று நினைத்து கொள்வார்கள் போல.

பாடல்கள் அதைவிட கொடுமை. ஐம்பத்து எட்டு வயது கிழவரான அஸ்வின் தாத்தா இருபத்தைந்து வயது பெண்ணான தமன்னாவை காதலிக்கிறார். இதிலே, “இன்னிக்கு நைட் மட்டும் நீ லவ் பண்ணா போதும்”னு ஒரு பாட்டு வேற. அதுக்கு பேருதான் காதல் போல.

துபாயிலே டான் ஆக இருந்த காட்சிகள், அஸ்வின் தாத்தா திக்கு சிவாவுக்கு இடையிலான காட்சிகள் வேண்டுமானால் இரண்டாவது பாகத்தில் வந்து பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கலாம். ஆனால் முதல் பாகம் விருந்தல்ல.

வியாழன், 22 ஜூன், 2017

காப்பியடித்த படங்கள்

சில விமர்சன அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். எந்தப்படம் வந்தாலும் அது அங்கே இருந்து காப்பியடிக்கப்பட்டது, இங்கே இருந்து காப்பியடிக்கப்பட்டது என்று குறை சொல்வதையே வழக்கமாக வைத்திருப்பார்கள். எந்தப் படைப்பையும் நேர்மறை கண்ணோட்டத்தில் பார்க்கவே மாட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் மற்றவர்களை குறை சொல்வது ஒரு வகை புத்திசாலித்தனம். அதே நேரம் தானாக முன்வந்து எந்தப் படைப்பையும் உருவாக்க மாட்டார்கள்.

ரிமேக் என்ற வகையில் எடுக்கப்படுபவற்றையும், பெருவாரியான காட்சிகள் வேறு ஒன்றுடன் ஒத்துபோனாலும் வேண்டுமானால் முழு காப்பி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு படத்தின் ஒரு சில அம்சங்கள் மற்றொரு படத்தில் இருக்கிறது என்பதற்காக அதைக் காப்பி என்று சொல்ல முடியாது.

சில வருடங்களுக்கு முன்பு வாரப்பத்திரிக்கை கட்டுரையில் படித்த ஞாபகம். தமிழ் படங்களான “நிலவே முகம் காட்டு”, “துள்ளாத மனமும் துள்ளும்” ஆகிய இரண்டும் சார்லி சாப்ளினின் “சிட்டி லைட்ஸ்” படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக எழுதியிருந்தார்கள்.

ஆனால் இந்த மூன்றும் வேறுவேறு விதமானவை. சிட்டி லைட்ஸ் காமெடியுடன் காதல் கலந்த உயர்கலை வடிவம். தமிழ்ப் படங்கள் இரண்டும் ஹீரோயிசம் காட்டும் வணிகப்படங்கள். நாயகிக்கு கண் தெரியாது என்பது மட்டும் தான் மூன்றிலும் இருக்கும் ஒற்றுமை.

“அவதார்” எடுத்த கேமரூனிடம் “எப்படி உங்கள் சிந்தனையில் இந்த மாதிரி கலரான மனிதர்கள் தோன்றினார்கள்” என்று. அவரோ, “நான் இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் உள்ள கிருஷ்ணனது உடல் நிறத்திலிருந்தே என் படத்தின் கதாபாத்திரங்களுக்கான நிறத்தை சிந்தித்தேன்” என்று பதில் கூறினார்.

அதற்காக கேமரூன் மகாபாரதத்தை காப்பியடித்து விட்டார் என்று கூறமுடியுமா?

நமது இயக்குனர்களுக்கு கற்பனைத்திறன் போதவில்லை என்பது உண்மைதான். தன் படத்திற்கான கதையை தானே எழுத வேண்டும் என்றே எண்ணுகிறார்கள்.

ஒரு எழுத்தாளரிடம் கதை எழுதி வாங்கி திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டும் தான் செய்யலாம் என்பதை அவர்கள் மனம் ஏற்பதில்லை. ஆனால் எல்லோரும் எழுத்தாளராகிவிட முடியாதே.

ஆகையால் தான் “நானே எழுதினேன்” என்று கூறிக்கொண்டு எங்காவது இருந்து கதையையோ இல்லை ஒரு சில அம்சங்களையோ உருவி விடுகிறார்கள். ஆனால் ஈயடிச்சான் காப்பி என்பது குறைவுதான்.

இயக்கம் என்பது வேறு. எழுத்து என்பது வேறு. அந்தந்த வேலையை அவரவர் செய்தால் மட்டுமே நலமாக இருக்கும். அப்படிச் செய்யாததால்தான் இன்று ஏகப்பட்ட தமிழ்ப்படங்கள் குப்பைகளாக வெளிவருகின்றன. மேலும் குப்பைப் படங்கள் வெளிவரக்காரணம் ரசனையற்ற, குப்பை மனோபாவம் கொண்ட ரசிகர்கள்.

இயக்குனர்களின் சிந்தனை மேம்பட வேண்டும். எழுத்தாளர்களை துணைக்கு வைத்துக்கொள்ள வேண்டும். விமர்சன அறிவுஜீவிகளும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.